வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

லிங்குசாமி கவிதைகள்

இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் 1968 ஆம் ஆண்டில் லிங்குசாமி பிறந்தார். திரு.நம்மாழ்வார் திருமதி.லோகநாயகி ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். லிங்குசாமி தனது தொடக்கக் கல்வியை இலட்சுமிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று கலை இளவல் பட்டம் பெற்றார். மாணவப் பருவத்தில், புதிய முகவரிகள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது ஹைகூ கவிதைகளைத் தொகுத்து லிங்கூ எனும் பெயரில் ஆனந்தவிகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. செல்பி எடுத்துக்கொள்கிறது மரம் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும்.  லிங்குசாமியின் கவிதைகளை  முன் வைத்து லிங்கூ அய்க்கூ  என்ற பெயரில் கவிஞர் அய்யப்ப மாதவன் ஆய்வு நூலொன்று எழுதியிருக்கிறார். இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Tree Snaps A Selfie எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. நிலையாமை, அழகியல், தத்துவம் ஆகியவை இவரது கவிதைகளின் உள்ளடக்கமாக உள்ளன. ஆனந்தம், ரன், சண்டைக்கோழி ஆகிய திரைப்படங்களை இயக்கி திரைப்பட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட லிங்குசாமி அவர்கள் நல்லதொரு கவிஞர் என்பதற்கு அடையாளமாக அவரது கவிதைகள் திகழ்கின்றன.

  

ஆற்றுவெள்ளம் 

அள்ளிக்கொண்டு போகிறது

மணல் லாரிகளை


(இந்த இயற்கை நம் முன்னோர் நமக்குக் கொடுத்த சொத்து, அதை நாம் அடுத்த தலைமுறைக்குக் அதைவிட சிறப்பாகக் கொடுக்கவேண்டியது நம் கடன் என்பதை மறந்து இயற்கை வளங்களை அழிக்கும் முயற்சிகள் எங்கும் நிகழ்கின்றன. அப்படிப்பட்ட ஒரு செயலே மணற்கொள்ளை. நேரடியாகப் பார்த்தால் ஆற்று வெள்ளத்தில் மணல் லாரிகள் இழுத்துச் செல்லப்படுவதுபோலத் தோன்றுகிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால், ஆற்றில் வெள்ளம் செல்வதால் மணல் அள்ளமுடியாமல் ஏமாறும் மணற்கொள்ளையர்கள் நம் மனக் கண்களில் தோன்றுகிறார்கள்) 



மரத்தடியில் வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்

கற்றுக்கொடுக்கிறது 

மரம்

 ( இந்த பரந்த உலகம் ஒரு பள்ளிக்கூடம் அதில் முட்டாள்கள் ஏதும் கற்பதில்லை என்றொரு பொன்மொழி உண்டு. இந்தக் கவிதையில் மரத்தடியில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ஆனால் மாணவர்கள் விரும்பினால் ஆசிரியரிடம் மட்டுமல்ல மரத்திடமிருந்தும் கற்கலாம் என்கிறார் கவிஞர். ஆம் மரம் சொல்லித்தராத பாடத்தையா ஆசிரியர் சொல்லித்தந்துவிடப் போகிறார். மரத்தில் உதிரும் சருகுகள் நிலையாமையைப் போதிக்கின்றன. புதிய அரும்புகளில் நம்பிக்கை ஒளிர்கின்றது. எத்தனை பறவைகளுக்கு கிளை தருகிறது மரம், எத்தனை உயிர்களுக்கு நிழலும் உயிர்க்காற்றும் தருகிறது மரம் என நம்மை சிந்திக்கவைப்பதாக  இக்கவிதை அமைகிறது.)



நிலவொளியில் மயானம்

அமைதியாய் வெட்டியான்

எங்கோ உதிர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பூ

(மரணம் என்பது தூக்கம் போன்றது, தூங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்பார் வள்ளுவர். அழகான நிலவின் ஒளியில் மயானம் அதில் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் வெட்டியான் அமைதியாக இருக்கிறான். எங்கோ உதிரும் பூ நிலையாமையை உணர்த்துகிறது. பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்பது நாமெல்லாம் அறிந்தும் பிறந்தநாள்களை இன்றும் கொண்டாடுகிறோம். இறந்தநாட்களில் கண்ணீர் சிந்துகிறோம்.)




ஒரு மரம் வைக்கும்போது 

நீங்கள் ஒரு

புத்தனையும் 

வரவேற்கிறீர்கள்

 (புத்தருக்குப் போதி மரத்தில் ஞானம் கிடைத்தது என்பார்கள். ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் என்பதுண்டு. ஆம் மருத்துவ குணமில்லாத மரங்கள் ஏதும் இல்லை. நம் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பயன்தரும் மரங்களை ஒவ்வொருவரும் வளரக்கவேண்டும் அதன் பயனை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். என்ன சிந்தனையுடன், மரம் வைக்கும் ஒவ்வொருமே புத்தனை வரவேற்பதற்குச் சமம் என்கிறார் கவிஞர்.)



அடையாளத்துக்கான

தழும்பைக்  காட்டும்போதெல்லாம்

நினைவில் வருகிறார்கள்

கவிதாவும் கணக்கு வாத்தியாரும்

(ஒவ்வொருவர் வாழ்விலும் பழைய நினைவுகள் என்று சில இருக்கும். அவற்றை மறக்கமுடியாது. நாம் மறந்தாலும் நம் உடலில் உள்ள தழும்புகள் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும். இந்தக் கவிதையில்  காட்டப்படும் தழும்பு இவருக்கு கவிதாவையும் கணக்கு வாத்தியாரையும் நினைவுபடுத்துகிறது. கவிதா இவரது காதலியாக, தோழியாக, உடன் பிறந்தவளாகக் கூட இருக்கலாம், கணக்கு வாத்தியார் அடித்ததில் ஏற்பட்ட தழும்புக்கு அவள் மயிலிறகால் மருந்து தடவியிருக்கலாம். அதை நம் கற்பனைக்கு விட்டுவிட்டார் கவிஞர். ஆனால் இதைப் படிக்கும்போது நம் உடலில் உள்ள தழும்பும் நாம்  சந்தித்த ஆசிரியர்களும் நினைவில் தங்கிச் செல்கிறார்கள்.)



அப்படி ஒன்றும் செய்துவிடவில்லை

போகிற போக்கில்

ஒரு கரப்பான் பூச்சியைப் புரட்டிப்போட்டேன்

 (இருள் இருள் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு விளக்கேற்றி வைப்பது மேலானது என்பார் கன்பூசியஸ். நம்மைச் சுற்றி நிகழும் எத்தனையே நிகழ்வுகளைப் பார்க்கும் வேடிக்கை மனிதர்களாகவே நாம் வாழ்ந்துவருகிறோம். ஒரு சிலர் அது குறித்து தம் கருத்துகளை சமூகத் தளங்களில் வெளியிடுகிறோம். வார்த்தைகளைவிட செயல் மேலானது என்பதை மறந்துவிடுகிறோம். கரப்பான் பூச்சியைப் பார்த்தால் அச்சம் கொள்பவர்கள் பலர். அதைக் கொன்றுவிடுபவர்கள் சிலர். அதன் மீது அன்பு கொண்டு அவற்றைக் கொல்லாமல் விடுபவர்கள் வெகுசிலரே. இந்த கவிதையில் கரப்பான் பூச்சியைக் கொல்லாமல் தலை குழாய் கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியைப் புரட்டிப் போட்ட செயல் மலையைப் புரட்டுவதைவிடவும் மேலான செயலாகத் தோன்றுகிறது. ஜீவகாருண்யம் என்ற உயிர்கள் மீது கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது.)

கூழாங்கல்லில் தெரிகிறது

நீரின் கூர்மை

 ( இயற்கைதான் மிகச்சிறந்த ஆசிரியர் என்று சொல்வதுண்டு. மனிதன் எவ்வளவுதான் செயற்கையாக பல அழகியல் கூறுகளை உருவாக்கினாலும் அவை இயற்கைக்கு என்றும் நிகரானவை அல்ல. இங்கே தண்ணீரில் தெரியும் கூழாங்கல் தண்ணீரின் கூர்மையைக் காட்சிப்படுத்துகிறது. கத்தியின் கூர்மையை அதன் நுனியில் காணலாம் அது எப்போது பார்த்தாலும் தெரியும். ஆனால் இதுபோன்ற காட்சிகள் பார்ப்பது அரிது. இக்கவிதையில் அழகியல் வெளிப்படுகிறது.)


ஒரு மரத்தைச் சாய்த்துதான்

இந்த வீணை செய்யப்பட்டிருக்கிறது

ஒரு முறை நீ மீட்டிவை

ஒரு வனம் உருவாகட்டும் 

(மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை. சான்றோர் தமக்காக வாழ்வதில்லை என்பார்  குரு நானக். அத்தகைய மரங்களை வெட்டித்தான் நாம் வீணை செய்கிறோம். நாம் நினைத்தால் மரங்களை வெட்டவும் முடியும். வனங்களை உருவாக்கவும் முடியும். மரங்களை வெட்டினாலும் வனங்களை உருவாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வைத் தூவிச் செல்கிறார் கவிஞர்) 


தற்கொலை செய்துகொள்ள மனமில்லை

கிணற்றில் 

நிலவைப் பார்த்தபிறகு

 (முட்டாள்கள் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவு தற்கொலை என்று சொல்வதுண்டு. பலமே வாழ்வு  பலவீனமே மரணம்  என்பார் விவேகானந்தா். சாவதற்கு அவளவு துனிச்சல் இருப்பவர்களுக்கு வாழ்ந்து பார்ப்பதற்குத் துனிச்சல் தோன்றுவதில்லை. கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளச் சென்றவருக்கு கிணற்றில் தோன்றும் நிலவைப் பார்த்தபிறகு மனம் மாறுகிறது. அழகியல் கண்களில் தோன்றுகிறது. மாற்றம் மனதில் தோன்றுகிறது.)


தூக்குக் கயிற்றினூடே

முகம் காட்டுகிறது 

நிலா

( நிலவைப் பாடத கவிஞர்களே இல்லை. நிலவு எந்த திசையில் பார்த்தாலும் அழகாகத் தோன்றும். இந்தக் கவிதையில் கவிஞர் தூக்குக் கயிற்றின் இடையில் நிலவைக் காண்கிறார்.  இக்கவிதையில் அழகியலுடன், நம்மைச் சுற்றியுள்ள இவ்வளவு அழகியலையும் இரசிக்காமல் சாவது அறிவுடைமையல்ல என்று உணர்த்தப்படுகிறது


சட்டென எதையாவது

உணர்த்திவிட்டுப் போகிறது

பறவையின் நிழல்

 (நேற்று என்பது இன்றைய நினைவு, நாளை என்பது இன்றைய கனவு. என்பார் கலீல் சிப்ரான். கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்ந்து கொண்டு நிகழ்காலத்துக்கு அவ்வப்போது வந்து செல்பவர்களாகவே பலரும் வாழ்கிறோம். சட்டெனக் கடக்கும் பறவையின் நிழல் ஏதோ நினைவுகளை அவருக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படுத்திவிடுகிறது.)


மான் அருந்தும் நீரில் 

புலியின் பிம்பம்

 ( புலிகள் வாழும் காடுகளில்தான் மான்களும் வாழ்கின்றன, ஆனாலும் தற்காப்பு உணர்வுடனேயே வாழ்கின்றன. மானும் ஓடுகிறது புலியும் ஓடுகிறது. புலி பசிக்காக ஓடுகிறது. மான் தன் உயிருக்காக ஓடுகிறது. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. உயிருக்காக ஓடும் மானுக்கு எப்போதும் புலியின் நினைவு இருப்பது இயல்புதானே. இதோ இந்தக் கவிதையில் மான் அருந்தும் நீரில் புலி மானின் கண்களுக்கு மட்டுமல்ல. நமது கண்களுக்கும் தோன்றுகிறது. ) 


கவிஞர் லிங்குசாமி அவர்களின் ஐக்கூ கவிதைகள் அவரின் அறிவின் ஆழத்தையும், அவரது இயற்கையை நுட்பமாகக் காணும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன. கவிதைகளில் ஆளப்பட்ட சொற்கள் மிக நேர்த்தியாக ஆளப்பட்டுள்ளன. அழகியல், நிலையாமை, வாழ்வியல், தன்னம்பிக்கை, இயற்கை, தத்துவம் என வாசிப்போர் திறனுக்கேற்ப வெவ்வேறு சிந்தனைகள் தோன்றுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக